Tuesday, June 26, 2012

ஒலியற்ற ஓசை



அது ஒரு பௌத்த விஹாரம். அதனுள் மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது. காது மடல்கள் நீண்டு, கைகள் அருள் பாலிக்க அமர்ந்த தோற்றம் அதனுடையது.
ஒரு வயோதிகத் துறவி அந்த விஹாரத்திற்கு உள்ளே வந்தார். அமைதியாக அங்கே அமர்ந்தார். புத்தரின் அருள் முகத்தை ஏறிட்டு நோக்கினார். அப்படியே நெடுநேரமாய்த் தியானத்தில் லயித்து விட்டார்.
பிறகு எழுந்தார். மிகவும் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
இதுபோல் தினந்தோறும் நிகழ்ந்தது. விஹாரத்தின் தலைவர் இதனை வியப்புடன் கவனித்து வந்தார்.
ஒருநாள் வழக்கம்போல் அந்த முதியவர் வந்தார். தியானத்தில் ஆழ்ந்தார். வெளியேறப் போனபோது மடத்தின் தலைமைக் குரு அவரை அணுகினார். பணிவுடன் அவரிடமிருந்து ஒரு கேள்வி பிறந்தது.
"ஐயா! நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சொன்னார்?"
"அவர் எப்போதும் எதுவும் சொல்லமாட்டார். ஆனால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்" என்றார் முதியவர்.
"அப்படியா? அதுசரி. அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்?" தனது அடுத்த கேள்வியைக் கேட்டார், விஹாரத்தின் தலைவர்.
"நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்!" என்ற முதியவரின் இந்தப் பதிலிலிருந்து அவர் ஒரு ஜென் குரு என்பதைப் புரிந்து கொண்டார் மடத்தின் தலைவர்.
நீதி : தியானம் என்பது எதையும் யாசிப்பதல்ல. தன்னுள் மூழ்கித் தன்னைத்தானே அறிதலே!
மவுனம் என்பது பேச்சை நிறுத்துவதல்ல. அது ஒரு நிசப்த சங்கீதம்.