Tuesday, June 26, 2012

திரும்ப கிடைக்கும் பரிசு



ஒரு கிராமத்தில் ஒரு வயதான போர் வீரர் இருந்தார். வயதானாலும் அவரது போர்க்கலை எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் அளவிற்கு இருந்தது. அதனால் பெரும் புகழ் பெற்றிருந்த அவருக்கு கீழ் பல இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
ஒரு இளைய வீரன் அந்த கிராமத்திற்கு வந்தான். அவ்வளவாகப் புகழ் பெற்றிருக்காத அவன் வயதான போர் வீரரை தோற்கடித்து முதல்வன் பட்டத்தை அடைந்து விடத் துடித்தான். அவனுடைய பலத்துடன், எதிராளியின் பலவீனத்தைக் கண்டு பிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது.
அவன் எதிராளியின் முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். எதிராளியின் பலவீனமறிந்து தன் கருணையற்ற தாக்குதலைத் தீவிரப்படுத்தி முதலடியிலேயே வீழ்த்திவிடுவான். இதுவரை எல்லோரையும் முதல் தாக்குதலிலேயே வீழ்த்திவிட்டான்.
இவனுடன் போட்டியிடுவதை வயதான வீரர் விரும்பாவிட்டாலும், தன் மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இளம் வீரனின் சவாலை ஏற்று மோத தயாரானார். போட்டிக் களத்திற்கு வந்ததும் இளம் வீரன் அவரை கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்து மண்ணை வாரி இறைத்தான். அவரை அவமானப்படுத்தி,கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் தோல்வியை ஒப்புக் கொண்ட இளைஞன் அவமானத்துடன் வெளியேறினான்.
இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து, " அவன் அவ்வளவு அவமானப்படுத்தினாலும் அதனைத் தாங்கிக் கொண்டு மௌனமாக இருந்தீர்களே, தங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன?" என்று கேட்டனர்.
குரு சொன்னார்: "யாரேனும் உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அதனை நீங்கள் பெற விரும்பாவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?"
கருத்து: அவமானங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை நம்மை சேராது.