Tuesday, June 26, 2012

பயனற்ற வாழ்க்கை



வயதான விவசாயிக்கு சிறிது நிலம் இருந்தது. வயதான காரணத்தினால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வீட்டில் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த விவசாயிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் நிலத்தில் வேலை செய்து விட்டு வந்து தனது தந்தையை பார்த்தான்.
தந்தை ஒரே இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மகன் இனி தந்தை நமக்கு பயன்பட மாட்டார் என்று எண்ணி சவப்பெட்டி ஒன்றை செய்து வீட்டிற்கு எடுத்து வந்தான்.
அதைக் காட்டி தனது தந்தையிடம் சவப்பெட்டிக்குள் சென்று படுத்துக் கொள் என்று கூறினான்.அதிர்ச்சியடைந்த தந்தையோ ஒன்றும் கூறாமல் உள்ளே ஏறி படுத்துக் கொண்டார். என்னை கொண்டுபோய் எறிந்து விடப்போகிறாய் என்று தெரியும் அதற்கு முன்னதாக உனக்கு ஒன்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று வயதான தந்தை தனது மகனைப் பார்த்து கேட்டார்.
உடனே மகன் வெறுப்புடன், "என்ன கூற வேண்டும்?" என்று கேட்டான்.
"என்னோடு சேர்த்து இந்த சவப்பெட்டியையும் எறிந்து விடாதே. இதை பத்திரமாக வைத்துக் கொள். ஏனெனில் உனது மகனுக்கு இது உதவியாக இருக்கும்" என்று கூறினார் அந்த வயதான தகப்பனார்.
கருத்து: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்